கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி.. உறைந்துபோன பேராசிரியர்கள்.. திருச்சியில் பரபரப்பு!
திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே, அதாவது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி சமயபுரம் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், திடீரென கழிவறையில் ஆண் குழந்தையைப் பிரசவித்த சம்பவமும், அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதிகளில் தங்கியிருந்து பயின்று வருகின்றனர்.
இதையும் படிக்க: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்.. 17 கிலோமீட்டர்… 400 போலீசார்… முதல்வர் விஜய்யின் ‘பவர்ஃபுல்’ கான்வாய் பயணம்!
தேர்வில் திடீர் உடல்நலக் குறைவு:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரும் இக்கல்லூரியில் சேர்ந்து, அங்குள்ள விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இக்கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின. அதன்படி, விடுதியில் தங்கிப் படித்து வந்த அந்த 20 வயது மாணவியும் தேர்வு எழுதுவதற்காக மற்ற மாணவர்களுடன் இணைந்து தேர்வு அறைக்குச் சென்றார். தேர்வு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அந்த மாணவிக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவர், தேர்வு அறையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் தனக்கு வயிறு வலிக்கிறது, அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.
கழிவறையில் நிகழ்ந்த பிரசவம்:
தொடர்ந்து, கழிவறைக்குச் சென்ற அந்த மாணவி வெகு நேரமாகியும் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக அறைக்குத் திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பேராசிரியர்கள் கழிவறை சென்று பார்த்தபோது, அந்த மாணவி ஆண் குழந்தையைப் பிரசவித்திருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அளவுகடந்த ரத்தப்போக்கு மற்றும் பிரசவ வலியின் காரணமாக அந்த மாணவி கழிவறையிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
தொடர்ந்து, அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாகச் செயல்பட்டு மயக்க நிலையில் இருந்த மாணவியையும், அவர் பெற்றெடுத்த பச்சிளம் ஆண் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். முதலுதவிக்குப் பிறகு, இருவரையும் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மாணவியும் குழந்தையும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த குழந்தை:
திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே, அதாவது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி சமயபுரம் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்வதற்காகத் திருச்சி அரசு மருத்துவமனையின் பிரேதக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில், குழந்தை பெற்றுக்கொண்ட 20 வயது கல்லூரி மாணவியும் அதே அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் தீவிரச் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில் வெளிவந்த காதல் பின்னணி:
இச்சம்பவம் தொடர்பாகச் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட அந்த மாணவி ஒரு வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதலின் விளைவாக அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் கூறாமல் ரகசியமாக மறைத்து, கல்லூரி விடுதியிலேயே தங்கிப் படித்து வந்ததும், இறுதியில் செமஸ்டர் தேர்வின் போது கழிவறையில் குழந்தையைப் பிரசவித்ததும் போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவியின் காதலன் யார் என்பது குறித்தும், சம்பவத்திற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!