தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்.. ஜூன் 1-இல் மாணவர்களுக்கு விநியோகம்!
Textbooks Provided To Students: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் ஜூன் 1- ஆம் தேதி திறந்த உடன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 88.06 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதியுடன் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதே போல, 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதற்கு முன்னதாகவே முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று விடுமுறைகள் விடப்பட்டன. தற்போது, தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் பள்ளிகளில் முன்னதாகவே முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தற்போது, கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1- ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய தினமே பாட புத்தகங்களை வழங்குவதற்கும் அரசு திட்டம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுமார் 4.10 கோடி புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
3.50 கோடி புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்
இதில், சுமார் 3 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்து 40 பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 4.10 கோடி பாட புத்தகங்கள் அச்சிடுவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆர்டர் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆர்டரில் சுமார் 88.06 சதவீத பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பாட புத்தகங்கள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!




ஜூன் 1- ஆம் தேதி பாடப்புத்தகங்கள் வழங்க திட்டம்
தமிழகத்தில், தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1- ஆம் தேதி 2026 – 2027 புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது. அப்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறந்தவுடன் அன்றைய தினமே அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் முந்தைய காலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 அல்லது 3 நாட்கள் கழித்தே பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கக்கூடாது
ஆனால், அந்த நாட்களில் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக முன்னதாகவே பாட புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு தற்போது முக்கால்வாசி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைந்த உடன் ஜூன் 1- ஆம் தேதி திட்டமிட்டபடி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும்: தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!