வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!
TVK CTR Nirmal Kumar Latest Press meet : தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நாளில் திட்டமிட்டே அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டினார் .
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து சேவை தடை செய்யப்பட்டுள்ளதா தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொது செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டே பேருந்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள் தான் இதற்கு காரணம். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல், உமாநாத் ஐஏஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகள் சேர்ந்துதான் மொத்த சட்டமன்ற தேர்தலையும் நடத்தி இருந்தனர். பொதுவாக, மு. க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தேர்தல் என்றாலே என்னவென்று தெரியாது. அவர்கள் இருவருக்கும் பின்னணியாக மேற்கண்ட அதிகாரிகள் தான் செயல்பட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் திட்டமிட்டு பேருந்து சேவையை நிறுத்தி உள்ளனர்.
20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை
இதே போல, முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த முக்கிய பேருந்துகள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பேருந்துகளும் அந்தந்த பனிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், தமிழக முழுவதும் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் நடுரோட்டில் நிற்கதியாக நின்றுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் சுமார் 15 மணி நேரத்துக்கு மேலாக உணவு மற்றும் நீரின்றி தவித்தனர். எனவே, இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!




தமிழகத்தில் திட்டமிட்டே பேருந்து நிறுத்தம்
ஏனென்றால், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழக தேர்தல் ஆணையம் போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. அதை காற்றில் பறக்க விட்டு விட்டு வேண்டுமென்றே வாக்குப்பதிவு நாளில் போதிய பேருந்து ஏற்பாடுகள் செய்யாமல், வந்த பேருந்துகளையும் திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகளான டேவிட்சன் தேவாசீர்வாதம், செந்தில்வேல், உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள், திமுகவினர் என அனைவரும் துணை நின்று செயல்பட்டுள்ளனர்.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் மே 4- இல் வரும்
இவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிய தண்டனை வழங்க வேண்டும். இதன் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மக்களும் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்க்கும் விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.. மத்திய மின்சார அமைச்சகம் எச்சரிக்கை!!