தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்; மழைக்கும் வாய்ப்பு.. இதோ வானிலை அப்டேட்!!
Weather Update: தமிழகத்தில் இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 23-ம் தேதி வரை உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூலை 23-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஜூலை 20) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (ஜூலை 21) நாளை முதல் வரும் 23ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 24ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
தமிழத்தில் இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டி இருக்கும். குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. உள் தமிழகத்தில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வீடியோ மோகம் விபரீதம்… வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து திருச்சி இளைஞர்கள் பலி!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் யாரும் குறிப்பிட்ட இந்த வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.