மேகதாட்டு அணை பிரச்சனை.. தமிழகம் – கர்நாடகா பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!.. ஓசூரில் பயணிகள் தவிப்பு!!
TN Karnataka bus status Hosur: தமிழகம் கர்நாடகம் பேருந்து சேவை ரத்து ஓசூர் அத்திப்பள்ளி எல்லைகளில் அமலுக்கு வந்துள்ளது. மேகதாட்டு அணை கோரி கன்னட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தனியார் கார்கள், சரக்கு லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன.
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணையைக் கட்ட வலியுறுத்திக் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து சேவைகள் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!
போராட்டத்தின் பின்னணி என்ன?
பெங்களூருவின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் சமன்பாட்டு நீர்த்தேக்கம் கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு: ஆனால், மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகக் டெல்டா மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாகும் எனக் கூறி தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
கன்னட அமைப்புகளின் மறியல்:
தமிழக அரசின் இந்த எதிர்ப்பைக் கண்டித்தும், அணை கட்டுவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கக் கோரியும் ‘வாட்டாள் நாகராஜ்’ தலைமையிலான கன்னட அமைப்புகள் மற்றும் ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ ஆகியவை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
எல்லைகளில் பலத்த பாதுகாப்பு:
போராட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இரு மாநிலப் போக்குவரத்துச் சேவைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாகப் பெங்களூரு நோக்கிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட தமிழக அரசுப் போக்குவரத்துச் கழக பேருந்துகள், பாதுகாப்பு கருதி கர்நாடக எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடகப் பேருந்துகளும் குறைப்பு:
கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு நாள்தோறும் இயக்கப்படும் சுமார் 110 பேருந்துகளில், 20% பேருந்துகள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. பிற மாவட்ட எல்லைகளிலும் பாதிப்பு: கிருஷ்ணகிரி – ஓசூர் எல்லை மட்டுமின்றி, ஈரோடு மாவட்டம் பர்கூர் வழியாகக் கர்நாடகா செல்லும் அரசுப் பேருந்துகளும் காரப்பள்ளம் சோதனைச் சாவடி எல்லைப் பகுதியிலேயே முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அத்திப்பள்ளி, ஜூஜூவாடி மற்றும் காரப்பள்ளம் உள்ளிட்ட அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் அசம்பாவிதங்களைத் தடுக்க இரு மாநிலக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தனியார் கார்கள், சரக்கு லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன.
எல்லையில் முடங்கிய பயணிகள்:
பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தப்படுவதால், பெங்களூரு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஓசூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படும் பயணிகள், அங்கிருந்து உள்ளூர்/நகரப் பேருந்துகள் மூலம் தமிழ்நாட்டின் கடைசி எல்லையான ஜூஜூவாடி வரை செல்கின்றனர். அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோக்கள் மூலமாகவோ கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை அடைகின்றனர். பின்னர் அங்கிருந்து இயங்கும் குறைந்த எண்ணிக்கையிலான கர்நாடகப் பேருந்துகளிலோ அல்லது தனியார் வாகனங்களிலோ முண்டியடித்துக்கொண்டு ஏறி பெங்களூரு நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!
வார இறுதி நாட்களில் சொந்த ஊர் வந்துவிட்டுப் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வேலைக்குத் திரும்புவோர், தினசரித் தொழிலாளர்கள் மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் செல்பவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.