AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TamilNadu Agriculture Budget: தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!

தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடி செலவில் புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நஞ்சில்லா விவசாய முறைகளை ஊக்குவித்து, அதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

TamilNadu Agriculture Budget: தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Aug 2026 12:38 PM IST

ஆகஸ்ட் 6, 2026: தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், விவசாயிகளின் நலன், வேளாண் கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நம்மாழ்வார் பெயரில் புதிய கல்லூரி:

வேளாண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் களப்பயிற்சிக்காக ரூ.3 கோடி மதிப்பில் ஆறு புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடி செலவில் புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. என்னென்ன திட்டங்கள்?

நஞ்சில்லா விவசாய முறைகளை ஊக்குவித்து, அதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:

  • வேளாண்மை பொறியியல் துறையை வலுப்படுத்தும் வகையில், திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி செலவில் வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரங்களை பராமரிக்கும் 15 மையங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்க ரூ.1.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 விவசாயிகளுக்கு கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ‘வான்மகள்’ திட்டத்தின் கீழ், 100 பெண்கள் உள்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கும் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்படும். அதில் பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ ரூ.11 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உயிர் உர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல், ரூ.122.51 கோடி மதிப்பில் மண்வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘உழவர்’ செயலி உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட 10 முக்கிய பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
  • இந்தப் போட்டியின் மூலம் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 சிறந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் கல்வி, தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள், விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Follow Us