Tamil Nadu Weather forecast: நீலகிரி, கோவையில் 3 நாட்கள் கனமழை: அக். 4ல் தேனி, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather today : நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2026 அக்டோபர் 4 முதல் 6 வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 3 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2026 அக்டோபர் 4 முதல் 6 வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் அலர்ட்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரள கடற்கரைக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதனுடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து கேரளா – கர்நாடகா கடலோரத்தை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்று உருவாகியுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ. உயரத்திலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தஇதன் காரணமாக தமிழகத்தில் வருகிற அக்டோபர் 8, 2026 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!




இந்த நிலையில் அக்டோபர் 3, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4, 2026 ஞாயிற்றுக்கிழமை 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் இவற்றுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, டெல்டா பகுதியை ஒட்டிய புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கொங்கு மற்றும் வட மேற்கு மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகியவற்றில் இடி, மின்னல் மற்றும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மின்தடையா? கரண்ட் பில் அதிகமா? இனி வாட்ஸ்அப் மூலம் தீர்வு
மேலும் அக்டோபர் 5, 6, 2026 ஆகிய 2 நாட்கள் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை தொடர்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் அக்டோபர் 7, 8, 2026 ஆகிய 2 நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், பிற பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழையும் பெய்யலாம்.