ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!
Rameswaram Smuggling Pain Relief Tablets : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை கடத்த முயன்ற நபரை கடலோர காவல் படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாத்தகோண்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணி சென்ற போது, கடற்கரை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை, போலீசார் நிறுத்த முயன்ற போது, அந்த வாகனத்தின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். உஷாரான போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பெயர் தவ நாகேஸ்வரன் என்பதும் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வலி நிவாரண மாத்திரைகளை பெட்டிகளில் அடைத்து இலங்கைக்கு கடத்துவதற்காக சோகையன்தோப்பு கடற்கரைக்கு கொண்டு செல்ல முற்பட்டது தெரியவந்தது.
10 பெட்டிகளில் 7.50 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
இதை தொடர்ந்து, சரக்கு வாகனத்தில் இருந்த அட்டைப் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அதில், 10 அட்டைப்பெட்டிகள் இருந்தது. ஒரு அட்டை பெட்டிக்கு 75 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் வீதம் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வலி நிவாரண மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக மண்டபம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!




ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் தீவிர விசாரணையின் அடிப்படையில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக சுமார் 7.50 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, ராமேஸ்வரம் பகுதி கடல் பரப்பில் இருந்து இலங்கை நாடு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இலங்கைக்கு அடிக்கடி நடக்கும் கடத்தல் சம்பவம்
இதன் காரணமாக, பீடி இலைகள், தங்கம், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி செல்லப்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக கடலோர காவல் படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலோர காவல் படை போலீசார் மேற்கொண்ட தீவிர ரோந்து பணியில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!