கூகுள் பே-வில் லஞ்ச வேட்டை.. வசமாக சிக்கிய எஸ்.ஐ- காவலர்.. சென்னை கமிஷனர் சஸ்பெண்ட் ஆக்சன்!
Chennai SI And Constable Suspend : சென்னையில் பொது மக்களிடம் கூகுள் பே மூலமாக லஞ்சம் வாங்கியதாக வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரை காவல் ஆணையர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் .
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வதற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் காவல் துறையில் பணிபுரியும் போலீசார் யாரும் லஞ்சம் வாங்க கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி லஞ்சம் வாங்கும் காவலர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரு காவலர்கள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, காவல் உதவி ஆய்வாளராக சிவராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் விவேக் என்பவரும் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இரு காவலர்கள் லஞ்சம் வாங்கியதாக புகார்
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இருவர் மீதும் லஞ்சம் குறித்த புகார் எழுந்தது. இந்த விவகாரம் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கவனத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தனக்கு கீழ் பணி புரியும் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: தஞ்சாவூரில் சத்தமின்றி நடந்த பெரிய ஆபரேஷன்.. கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய 6 பேர் கைது.. எஸ்ஐடி குழு அதிரடி!




கூகுள் பே மூலமாக லஞ்சம் பெற்ற காவலர்கள்
அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் காவலர் விவேக் ஆகியோரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவரும் பொது மக்களிடம் லஞ்சம் வாங்கியதை ஒத்துக் கொண்டனர். இரு காவலர்களும் கூகுள் பே மூலமாக லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் காவலர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இரு காவலர்களின் கூகுள் பேவிலும் ஆதாரம் இல்லாத பண பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
உதவி ஆய்வாளர்- காவலர் அதிரடி சஸ்பெண்ட்
இது தொடர்பாக காவல் ஆணையருக்கு உயர் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்து இருந்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் காவலர் விவேக் ஆகிய இருவரும் மீதும் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார். இதே போல, மாதவரத்தில் உதவி ஆய்வாளர் ஒருவரும் லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு.. கதறும் கணவன்.. திருப்பி அடித்த மனைவி.. திருவள்ளூரில் பரபரப்பு!