மின்தடையா? கரண்ட் பில் அதிகமா? இனி வாட்ஸ்அப் மூலம் தீர்வு
Electricity Bill Complaints: மின்சாரம் தொடர்பான புகார்களுக்காக இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக். 2 : மின்சாரம் தொடர்பான புகார்களுக்காக இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக 94987 94987 என்ற வாட்ஸ்ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
மின்வாரியத்தின் புதிய வாட்ஸ்அப் சேவை
முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் தாமதமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் முக்கிய நோக்கம் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு எந்த நேரமாக இருந்தாலும் சரி, விடுமுறை நாட்களிலும் எந்த நேரத்திலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : டீ கடையில் முதல்வர் விஜய்.. மதுராந்தகத்தில் வேறு பாணியில் வாக்கு சேகரிப்பு.. என்ன காரணம்!




புகார் அளிப்பது எப்படி?
இந்த வாட்ஸ்அப் சாட்பாட் சேவையைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலில் உங்கள் மொபைலில் 94987 94987 என்ற எண்ணை உங்கள் போனில் சேமித்துக்கொள்ளுங்கள். பின்னர் வாட்ஸ்ஆப் செயலியில் அந்த எண்ணுக்கு ஹை என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் எண் அல்லது மின் இணைப்பு எண்ணைப் பயன்படுத்தி புகார் விவரங்கள் பதிவு செய்யப்படும். பதிவான புகார் உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் உள்ளிட்ட சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார் அளிக்கும் வசதிகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் அதன் அடுத்த கட்டமாகவே இந்தத் வாட்ஸ்அப் புகார் சேவை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் விரைவாகவும் சிரமமின்றியும் மின் சேவைகளைப் பெற முடியும் என்றும், குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் பணிகள் தொடரும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடும்போது தற்போது மின் கட்டணம் அதிகமாக வருவதாகப் பல பகுதிகளில் இருந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்குத் தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில், மின் கட்டணம் உள்ளிட்ட குறைகளைப் பொதுமக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் இந்த வாட்ஸ்ஆப் சேவை அறிமுகமாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க : எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!
முன்னதாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நலம் ஏஐ என்ற பெயரில் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் புற நோயாளிகள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஓபி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.