Tamil Nadu Weather forecast: நாளை இந்த 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் அக்டோபர் 3, 2026 நாளை மதுரை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 2 : தமிழகத்தில் அக்டோபர் 3, 2026 நாளை 8 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 2026 அக்டோபர் 4 முதல் 6 வரை மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை இந்த 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கேரள கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி ஒன்று காணப்படுகிறது. அதே உயரத்தில், தென்கிழக்கு அரபிக்கடலில் தொடங்கி கேரளா – கர்நாடகா கடலோரத்தை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “தவெகவுக்கு சாதகமாக தேர்தல் களம் இல்லை”.. சிபிஎம் சண்முகம் கடும் பாய்ச்சல்!!




அந்த வகையில் அக்டோபர் 3, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4, 2026 ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2026 அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்களிலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கூகுள் பே-வில் லஞ்ச வேட்டை.. வசமாக சிக்கிய எஸ்.ஐ- காவலர்.. சென்னை கமிஷனர் சஸ்பெண்ட் ஆக்சன்!
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2026 அக்டோபர் 2, 3 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது.