AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி வந்த ரவுடி.. அதிரடியாக சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

Sriperumbudur Crime: ஸ்ரீபெரும்புதூர் அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி சதாம் உசைன், போலீசாரைத் தாக்க முயன்றதால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 23 கிலோ கஞ்சா மற்றும் 3 பட்டாக்கத்திகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை தீவிர சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி வந்த ரவுடி.. அதிரடியாக சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு
ரவுடி சுட்டுப்பிடிப்பு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Oct 2026 13:10 PM IST

காஞ்சிபுரம், அக்.02: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மணிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை, ரோந்து மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த இந்த நபர், போலீசாரைப் பட்டாக்கத்தியால் தாக்க முயன்றபோது தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், கஞ்சா மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!

கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி:

காஞ்சிபுரம் மாவட்ட எல்லையோரப் பகுதியான மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வெங்கடேசன் என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தமிழக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் சதாம் உசைன் என்பவர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில், குற்றவாளி சதாம் உசைன் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டு, தனிப்படை போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

காட்டுப்பகுதியில் பதுங்கி போதைப்பொருள் விற்பனை:

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், தலைமறைவாக இருந்த சதாம் உசைன் தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கரசங்கால் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பழைய பாழடைந்த கட்டிடத்தில் சதாம் உசைன் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப் பகுதியைச் சுற்றி வளைத்து அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீது தாக்குதல் முயற்சி:

போலீசார் தன்னைச் சுற்றி வளைத்ததைக் கண்ட ரவுடி சதாம் உசைன், தப்பிச் செல்லும் நோக்கில் தான் வைத்திருந்த நீண்ட பட்டாக்கத்தியை எடுத்து காவல் துறையினரை நோக்கிக் கொடூரமாகத் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது, தன்னையும் உடன் வந்த காவலர்களையும் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, தனிப்படை அதிகாரி ரவுடி சதாம் உசைனின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை அதிரடியாகக் கைது செய்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கஞ்சா பறிமுதல் மற்றும் தீவிர விசாரணை:

கைது செய்யப்பட்ட சதாம் உசைன் பதுங்கியிருந்த இடத்திலிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 23 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 3 நீளமான பட்டாக்கத்திகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீது நிலுவையில் உள்ள பிற வழக்குகள் குறித்தும், அவரோடு தொடர்பில் இருந்த கூட்டாளிகள் மற்றும் இந்த நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து வாங் கப்பட்டன என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us