AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? வெளியான முக்கிய தகவல்!

Tamil Nadu New Secretariat : தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? வெளியான முக்கிய தகவல்!
தலைமை செயலகம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Oct 2026 08:38 AM IST

சென்னை, அக்டோபர் 20 : தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, தற்போது பல்லவன் இல்லம் (Pallavan House) புதிய தலைமைச் செயலகத்திற்கான இடமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம்

தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த 22 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்

முதற்கட்டமாக, சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அப்பகுதி மக்களும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகமா?

பட்டினப்பாக்கத்தில் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மாற்று இடங்களைத் தேர்வு செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சென்னை பல்லவன் இல்லம் புதிய தலைமைச் செயலகத்திற்கான இடமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வரும் பல்லவன் இல்ல வளாகம், சுமார் 13.22 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குத் தேவையான இடவசதி இங்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த வளாகத்தைத் தேர்வு செய்தால் கூடுதலாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்பதும், பல்லவன் இல்லம் பரிசீலிக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகள் எளிதாகக் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாநகரப் பேருந்து போக்குவரத்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்வது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கும் இந்தப் போக்குவரத்து இணைப்புகள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்..

மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகம் இடமாற்றமா?

தற்போது பல்லவன் இல்ல வளாகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதன்படி, பல்லவன் இல்லத்தில் செயல்படும் மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அலுவலக இடமாற்றம் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Follow Us