சிவகங்கையில் கூலிப்படையினரின் மனித வேட்டை.. தவெக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.. லெப்ட்- ரைட் வாங்கிய நயினார்!
Nainar Nagendran Latest Speech : சிவகங்கையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கையில் கூலிப்படை கும்பல் மனித வேட்டை நடத்திய சம்பவம் தவெக அரசின் மன்னிக்க முடியாத நிர்வாக தோல்வியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் 15- க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுள்ளான் மதன் என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடூரமான கொலை என கூறப்படுகிறது. இந்த கொலை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
தவெக அரசின் மன்னிக்க முடியாத தோல்வி
அவர் மீது பழிவாங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் போலீசாரும், உளவுத்துறையும் முன்னதாகவே கணிக்க தவறியது ஏன். தமிழக வெற்றிக் கழக அரசின் மன்னிக்க முடியாத நிர்வாக தோல்வியாகவே இது உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் திரண்டு இருந்த ஒரு திருவிழா களத்தில் கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து மனித வேட்டை நடத்தும் அளவுக்கு துணிச்சல் எப்படி வந்தது. இந்த சம்பவம் தமிழக உளவுத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதையே வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!




கூலிப்படை கலாசாரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குக
தமிழக காவல்துறையை தனது வசம் வைத்துள்ள முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் மேடைகளில் மேடையில் பேசிய கவர்ச்சிகரமான வெற்று பேச்சுகளோடு நின்று விட்டதன் காரணமாக தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான பயம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தனது நிர்வாக மெத்தனத்தை கைவிட்டு விட்டு இத்தகைய கூலிப்படை கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு உடனடியாக அடக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ரவுடி கொலை சம்பவத்தின் பின்னணி
சிவகங்கை மாவட்டம், மேலமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனது காளையுடன் பங்கேற்பதற்காக ரவுடி சுள்ளான் மதன் என்பவர் தனது காளை மாட்டுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று இருந்தார். அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனங்களில் வந்த 10- க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்துக்கு தான் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!