தவெக அரசை சீர்குலைக்க சதி… குண்டை தூக்கி போட்ட வைகோ.. அரசியலில் அடுத்த பரபரப்பு!
MDMK Vaiko Latest Pressmeet : தமிழக வெற்றிக் கழக அரசை அதிகாரிகள் திட்டமிட்டு சீர் குலைக்க முயற்சி செய்வதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசை அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பிரச்சனைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம். தமிழக முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தான் உடன் இருந்தனர். இதன் காரணமாக தான், அவர்கள் தொடக்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராக மௌனமாக இருந்துவிட்டு தற்போது நாடு முழுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகமும் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் தான் ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டிருந்தது.
கூட்டணியில் இருந்ததால் திமுகவை விமர்சிக்கவில்லை
அப்போது, கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதற்காக நான் பொதுவெளியில் எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்து விட்டேன். கூட்டணிக்குள் எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருந்தேன். கூட்டணியில் இருந்து கொண்டு வெளியில் விமர்சனம் செய்வது ஆரோக்கியமான அரசியல் கிடையாது. நான் அந்த மாதிரியான அரசியலை செய்ததும் இல்லை. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட எந்த துறைகளிலும் கமிஷன் பெறப்படவில்லை.
மேலும் படிக்க: SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!




தவெக அரசை அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சி
ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது ஆகும். அதனை இந்த தவெக அரசு கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறது. கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் கமிஷன் வாங்கி பழகிய அதிகாரிகள், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாத காரணத்தால், தவெக அரசை திட்டமிட்டு சீர்குலைக்க பார்க்கிறார்கள். எம். ஜி. ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்தேன் கொலை, குற்றங்கள் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
அனுபவம் பெற்று சிறப்பாக அரசை நடத்துவார்கள்
தற்போதைய, தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் அதே நிலை தான் தொடர்கிறது. முன்பு இருந்ததை போல தற்போதும் காவல்துறையினர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் அவர்களால் எவ்வளவு முடியுமோ அதனை செய்து வருகின்றனர். அதில், தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொண்டும் வருகின்றனர். காலம் செல்ல செல்ல அனுபவம் பெற்று அரசை சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: “திமுக தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்; மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தக் கூடாது!”.. துரை வைகோ