AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!

Krishnaswamy Questions Congress on SIR Stance: தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதற்கு SIR திருத்தமே காரணம் என்று டெல்லியில் பேசும் கட்சிகள், அதனைத் தமிழகத்தில் பேச தயங்குவது ஏன் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தச் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!
கிருஷ்ணசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Oct 2026 07:58 AM IST

கோவை, அக்.19: SIRக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொள்ளும் போராட்டங்களில் நிலவும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எழுப்பியிருக்கும் கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் SIR திருத்தங்கள் மற்றும் தேர்தல் நடைமுறை மாற்றங்கள் காரணமாகவே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், இது குறித்துத் தேசியக் கட்சியான காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் டெல்லியில் குரல் கொடுப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நேரடியாகக் களமிறங்கிப் போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : சென்னையில் கனமழை எதிரொலி.. அமைச்சர்கள் உடனே திரும்ப முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

ஆட்சி மாற்றம் குறித்த சர்ச்சை:

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தலைநகர் டெல்லியில் சில கட்சிகள் எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுமார் 110 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இந்தத் திருத்தங்களின் காரணமாகவே மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுத்தான் தற்போதைய ஆட்சி மலர்ந்துள்ளது என்றால், இந்த அரசு சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல என்ற பொருள்படும் என்பதை கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார். அத்தகைய சூழலில், இந்த முறைகேடுகள் குறித்துக் காங்கிரஸ் கட்சியும் த.வெ.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, நேரடியாகத் தமிழகத்திற்கு வந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மௌனம்:

தேசியக் கட்சியான காங்கிரஸுக்குத் தமிழகத்தில் நடக்கும் அரசியல் உண்மைகளும் தேர்தல் நிலவரங்களும் முழுமையாகத் தெரிந்திருந்தும், அவர்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகப் பேசத் தயங்குவது ஏன் என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தற்போதைய ஆட்சி சரியான முறையில் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானால், அதற்குக் காரணமான விவகாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துப் போராட்டம் நடத்துவதற்கான களம் டெல்லி அல்ல, மாறாகச் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்தான் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். கூட்டணி நலனுக்காக உண்மைகளைப் பேசத் தயங்கும் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் கிருஷ்ணசாமி எழுப்பிய இந்தக் கேள்விகள் தற்போது தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இதையும் படிக்க: “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்:

இந்த விவகாரம் குறித்துக் மேலும் விரிவாகப் பேசிய கிருஷ்ணசாமி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணிகள் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். குடிமக்களின் அடிப்படை ஓட்டுரிமை பறிக்கப்படுவது நேரடியான ஜனநாயக படுகொலை என்றும், இது குறித்து மத்திய அரசு உடனடியாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தச் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் நிலவும் மௌனம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால், உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து மத்திய அரசு உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

Follow Us