AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

P Shanmugam To R.S Barathi: “திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்தபோதுதான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வியடைந்தோம். அதற்குத் திமுகதான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை. கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சண்முகம் கூறினார்.

“வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Oct 2026 10:27 AM IST

அக்டோபர் 18, 2026: திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். “திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்தபோதுதான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வியைச் சந்தித்தோம். அதற்குத் திமுகதான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. ஆர்.எஸ். பாரதி வாய் துடுக்காகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, இடைத்தேர்தலில் திமுக தனது வலிமையை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டணியில் இருந்த சில கட்சிகளை விமர்சித்தார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவே போட்டியிட்டிருந்தால் கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும், ஆட்சியமைத்திருக்க முடியும் என்றும் அவர் பேசியிருந்தார். மேலும், ஏழரை நாட்டு சனியனகள் ஒழிந்துவிட்டார்கள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தனது பலத்தை நிரூபிக்கும் எனக் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ். பாரதிக்கு சண்முகம் பதிலடி

இந்தக் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில், பொள்ளாச்சி சங்கம்பாளையம் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் சண்முகம், புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த ஆர்.எஸ். பாரதியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்தபோதுதான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வியடைந்தோம். அதற்குத் திமுகதான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை. கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: தேர்தல் வெற்றி, கட்சி தொடக்க விழா, விஜய் பிறந்தநாள்.. முப்பெரும் விழாவாக மாறும் தவெகவின் 3வது மாநாடு! எங்கே தெரியுமா?

மேலும், ஆர்.எஸ். பாரதி மூத்த அரசியல்வாதி என்றும், தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாய் துடுக்காகப் பேசும் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்றும், மூத்த தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பது இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்காது என்றும் சண்முகம் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணிப் போராட்டத்தில் திமுக இணைய வேண்டும்

தொடர்ந்து பேசிய சண்முகம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை (SIR) காரணமாக வாக்குரிமையை இழந்ததாகக் கூறப்படும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் திமுகவும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் இணைந்து செயல்பட முடியும் எனக் குறிப்பிட்ட சண்முகம், நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Follow Us