பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!
Chennai Crime: சென்னை பூந்தமல்லி அருகே உள்ள அம்மா நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகப் பூந்தமல்லி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரி விஜயராகவனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அக்டொபர் 18, 2026: சென்னை பூந்தமல்லி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள அம்மா நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகப் பூந்தமல்லி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரி விஜயராகவனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தேர்தல் வெற்றி, கட்சி தொடக்க விழா, விஜய் பிறந்தநாள்.. முப்பெரும் விழாவாக மாறும் தவெகவின் 3வது மாநாடு! எங்கே தெரியுமா?
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், ராஜ்குமார் மற்றும் சபரி என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
500 போதை மாத்திரைகள் பறிமுதல்
முதற்கட்ட விசாரணையில், மூன்று பேரும் அந்தப் பகுதியில் சுமார் 500 போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், போதை மாத்திரை விற்பனைக்கும் அவர்களது பிற குற்றச் செயல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: சென்னையில் மேக வெடிப்பு.. கொட்டித்தீர்த்த மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை! இன்றும் மழை இருக்குமா?
போதை மாத்திரை விற்பனை பின்னணியில் யார்?
இந்த மாத்திரைகளை எங்கிருந்து வாங்கி வந்தனர், யாரிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர், இந்தச் செயல்பாட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் குழுக்கள் செயல்படுகின்றனவா என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பூந்தமல்லி அருகே 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.