சென்னையில் கனமழை எதிரொலி.. அமைச்சர்கள் உடனே திரும்ப முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!
CM Vijay Orders Ministers Return: சென்னையில் மழைநீர் தேக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, மாநகராட்சியின் மண்டலங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18, 2026: சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையின் மழை நிலவரம் குறித்து முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக மாலை முதல் இரவு வரை கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி மாலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடி, மின்னலுடன் நீடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வடசென்னை முதல் தென்சென்னை வரையிலான பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாகச் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.
18 மண்டலங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள்
சென்னையில் மழைநீர் தேக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, மாநகராட்சியின் மண்டலங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நள்ளிரவில் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. 273 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்!
மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மழை நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்டறிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மழைநீரை அகற்ற மாநகராட்சி தீவிரம்
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
ராட்சத மோட்டார்கள், பம்புகள் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. இன்று காலை வரை 273 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், ஒன்பது இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அவை உடனடியாக அகற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: சென்னையில் மேக வெடிப்பு.. கொட்டித்தீர்த்த மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை! இன்றும் மழை இருக்குமா?
மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உதவி தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கண்காணிப்பில் சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளைக் கண்காணிப்பது, போக்குவரத்துப் பாதிப்புகளைச் சீரமைப்பது, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.