AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நள்ளிரவில் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. 273 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்!

Chennai Water Logging: நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தாலும், இன்று காலைக்குள் 273 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். மேலும், மழையின் காரணமாக ஒன்பது இடங்களில் மரங்கள் சாய்ந்ததாகவும், அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நள்ளிரவில் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. 273 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Oct 2026 12:24 PM IST

அக்டோபர் 18, 2026: வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேக்கம்

தொடர்ந்து பெய்த கனமழையால் ராயப்பேட்டை, வடசென்னை, வேளச்சேரி, தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

நள்ளிரவில் ஆய்வு; தீவிரமடைந்த மாநகராட்சிப் பணிகள்

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நள்ளிரவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்கள் மழைநீர் தேக்கம் மற்றும் அவசர உதவிகள் தொடர்பாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையை 1913 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை விரைந்து அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் களமிறங்கினர். தேங்கிய மழைநீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் அகற்றம்


நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தாலும், இன்று காலைக்குள் 273 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். மேலும், மழையின் காரணமாக ஒன்பது இடங்களில் மரங்கள் சாய்ந்ததாகவும், அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட கேள்விகள்.. கண்ணீர் விட்டு அழுத ஜெம் வீரமணி? விசாரணையில் வெளியான தகவல்கள்!

மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், முகாம்களில் தங்குவதற்காக பொதுமக்கள் யாரும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 13,500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து கண்காணிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழைநீரை விரைந்து வெளியேற்றுதல், சாய்ந்த மரங்களை அகற்றுதல், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மழைநீர் தேங்கும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசர உதவி தேவைப்பட்டால் மாநகராட்சியின் 1913 கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow Us