நண்பர்கள் எச்சரிக்கையை மீறி சென்ற இருவர்.. புழல் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..சென்னையில் நிகழ்ந்த சம்பவம்!
Puzhal Lake Two Students Drown : புழல் ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற இரு மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம், அம்பத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் அகில் ராம் ( 14 வயது), தருண் ஆகாஷ் ( 14 வயது). இவர்கள் இருவரும் அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கள்ளிகுப்பம் பகுதி அருகே உள்ள புழல் ஏரிக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தனர். ஏரியில் மாணவர்கள் அனைவரும் இறங்கி ஆனந்தத்துடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, உற்சாக மிகுதியில் மாணவர்கள் அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். உடன் சென்ற சக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதனை கேட்காமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
நண்பர்கள் எச்சரிக்கையை மீறி ஆழமான பகுதிக்கு சென்ற மாணவர்கள்
அப்போது, மாணவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதில், தங்களை காப்பாற்றுமாறு தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர். அப்போது, கரையில் நின்று கொண்டிருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து யாராவது காப்பாற்ற வாருங்கள் என்று கூறி சத்தம் போட்டனர். ஆனால், அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் இரு மாணவர்களும் ஏரி நீருக்குள் மெல்ல மெல்ல மூழ்கி மாயமாகினர். பின்னர், கரையில் நின்று கொண்டிருந்த சிலர் ஏரியின் உள்ளே இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: கார் கண்ணாடி உடைத்து திருடப்பட்ட 10 சவரன் நகைகள்.. தசரா காண வந்த பெங்களூரு பெண்ணுக்கு ஷாக்!




ஏரி நீரிழ் மூழ்கி பலியான இரு மாணவர்கள்
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக அகில் ராம், தருண் ஆகாஷ் ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புழல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் மூழ்கி மாயமான இரு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தேர்தலில் இரு மாணவர்களும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
புழல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
தொடர்ந்து, அவர்களை அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்ந்து, அவர்களது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: செவிலியர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீசிடம் சிக்கிய சந்தேக நபர்.. வெளியான புதிய தகவல்கள்!!