சென்னையில் இருந்து கோவா செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெரும் பரபரப்பு!
Chennai Airport Bomb Threat | சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்வதற்காக விமானம் ஒன்று தயாராக இருந்தது. இந்த நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை, அக்டோபர் 20 : சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) இருந்து கோவா (Goa) செல்ல தயாராக இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இருந்து கோவா செல்ல இருந்த விமானத்திற்கு மிரட்டல்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்டோபர் 19, 2026) மாலை 5.40 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கோவா செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மொத்தமாக 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த விமானத்தில், விமானம் புறப்படுவதற்கு முன்னதாக வழக்கம் போல மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!




காகிதம் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டல்
அப்போது விமானத்தின் கழிவறையில் காகிதம் ஒன்றில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதி இருந்ததை விமான பணிப்பெண் ஒருவர் கவனித்துள்ளார். அவர் உடனடியாக அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க : சிவகங்கையில் கூலிப்படையினரின் மனித வேட்டை.. தவெக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.. லெப்ட்- ரைட் வாங்கிய நயினார்!
இந்த சோதனையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அப்போது அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. இவ்வாறு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக விமானத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதை போல் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மிரட்டல் விடுத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.