AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற இனி ஆதார் எண் கட்டாயம்.. இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Annan Seer Scheme: அரசின் புதிய அறிவுறுத்தலின்படி, திருமண உதவித்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். இதுவரை ஆதார் அட்டை பெறாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற இனி ஆதார் எண் கட்டாயம்.. இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2026 18:34 PM IST

அக்டோபர் 19, 2026: தமிழக அரசின் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய உத்தரவைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருமணத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு 22 கேரட் தரத்தில் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது.

ஆதார் எண் கட்டாயம்

அரசின் புதிய அறிவுறுத்தலின்படி, திருமண உதவித்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். இதுவரை ஆதார் அட்டை பெறாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் சிறப்பு ஆதார் பதிவு முகாம்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதிக்கு 13 நவீன பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் இயந்திரங்கள்! முதலமைச்சர் விஜய் உத்தரவு..

ஆதார் எண் இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இதுவரை எண் ஒதுக்கப்படாத நிலையில் உள்ளவர்கள், ஆதார் பதிவு அடையாளச் சீட்டுடன் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மாற்று அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம்.

  • குடும்ப அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம்
  • பான் கார்டு
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • புகைப்படத்துடன் கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம்
  • வட்டாட்சியர் அல்லது அரசு அதிகாரி வழங்கும் புகைப்பட அடையாளச் சான்று

ஆதார் அங்கீகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று வசதி

கைரேகையின் தரம் குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆதார் அங்கீகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் மறுக்கப்படக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக கைரேகைக்குப் பதிலாக கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த முறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாத சூழலில், ஆதார் கடிதத்தில் உள்ள க்யூ.ஆர். குறியீட்டைச் சரிபார்த்து திட்டத்தின் பயன்களை வழங்கலாம்.

மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!

இந்த அனைத்து நடைமுறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாத நிலை ஏற்பட்டால், மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான பெண்களுக்கு திருமண உதவி கிடைப்பதை உறுதி செய்வதுடன், ஆதார் அங்கீகாரத்தில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களால் யாரும் நலத்திட்டப் பயன்களை இழக்கக் கூடாது என்பதையும் இந்த உத்தரவு வலியுறுத்துகிறது.

Follow Us