AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: சிறைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை?

Tamil Nadu Cabinet Meeting : முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 29, 2026 இன்று நடைபெற்று வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 3வது அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: சிறைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Oct 2026 12:40 PM IST

சென்னை, அக்டோபர் 29 : முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 29, 2026 இன்று நடைபெற்று வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 3வது அமைச்சரவைக் கூட்டம் (Cabinet Meeting) இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்க முன்வந்துள்ள நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள், இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமனம் – தமிழக அரசின் முடிவுக்கு வலுக்கும் கண்டனம்

மேலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினரும் மீனவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதிய தலைமை செயலகத்துக்கான மாற்று இடங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படலாம் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 436 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், முதல்வர் ஏற்கெனவே மேற்கொண்ட துறைவாரியான ஆய்வுகளின்போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு தீர்வு

தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம், தமிழக சிறைகளின் பாதுகாப்பு குறித்துக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதுமான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை!

இதனிடையே கூட்டம் நிறைவடைந்த பிறகு, தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது. இதற்கான அரசாணையை அக்டோபர் 29, 2026 இன்று காலை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Follow Us