சென்னை, மார்ச் 22 : பள்ளி ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து வரும் நிலையில், கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை விட முடிவு செய்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், முன்கூட்டியே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் வருகையை பொறுத்த வரை ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தல் 2026 : டாஸ்மாக் கடைகளுக்கு 3 முக்கிய கட்டுப்பாடுகள் – டோக்கன் மூலம் மதுபானம் விற்க தடை
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்
இதனையடுத்து வருகிற ஏப்ரல் 16, 2026 அன்று முதல் ஜூன் 11, 2026 அன்று வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 17, 2026 முதல் ஜூன் 12, 2026 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, விருதாச்சலம் மற்றும் விழுப்புரம் வழியாக செல்லும்.
திருநெல்வேலி – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் சேவை
இதனையடுத்து ஏப்ரல் 12, 2026 முதல் ஜூன் 7 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் வரை 17 பெட்டிகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சென்னையில் இருந்து ஊற் திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 13, 2026 அன்று முதல் ஜூன் 8, 2026 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரியல் விருதுநகர், மதுரை, திருச்சி, விருதாச்சலம் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13, 2026 முதல் ஜூன் 8, 2026 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடி வரை 24 பெட்டிகளுடன் சிறப்பு ரியில்கள் இயக்கப்படவுள்ளது. மேலும் ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 14, 2026 முதல் ஜூன் 9 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிக்க : “வாக்காளர் அட்டையில் எழுத்துப் பிழை உள்ளதா?”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
இந்த சிறப்பு ரயில்களுக்கு விரைவில் முழுமையான நேர அட்டவணை மற்றும் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை காலத்தில் அதிகமான பயணிகள் இந்த சேவைகளை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.