“பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
நாங்கள் (திமுக) ஆட்சியில் இருந்தே வெளியே வந்துவிட்டோம். ஆனால், புதிய அரசோ இன்னும் ஒரு தேர்தல் மனநிலையில் இருந்தே வெளிவராமல், தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. தாங்கள் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னை, ஜுன் 4: உடைமைகளுக்கும் உயிருக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற ரீதியில்தான் புதிய அரசு உள்ளது என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய ஆளுங்கட்சியினரை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, “நூற்றுக்கணக்கான கொலைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நம் கண் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது கடமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
நிர்வாகம் பொறுப்பல்ல என்பது போல அரசு:
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எல்லாரும் பேசுகிறார்கள். எனக்கு ஆட்சி மாற்றத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவில்லை. பொதுவாக ஒரு அரசு அமைந்தால் அதனை ‘ஆட்சிப் பொறுப்பேற்பது’ என்றுதான் கூறுவார்கள். ஆனால் இந்த புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. நாம் ஏதேனும் உணவகங்களுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ சென்றால், அங்கே ‘உங்களுடைய உடைமைகளுக்கோ பொருட்களுக்கோ நிர்வாகம் பொறுப்பல்ல’ என்று ஒரு பலகை வைத்திருப்பார்கள். இன்று தமிழ்நாட்டின் நிலையும் அதேபோல்தான் உள்ளது. பொதுமக்களின் உயிருக்கோ, உடைமைகளுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ இந்த அரசோ நிர்வாகமோ பொறுப்பல்ல என்று சொல்லக்கூடிய ஒரு அவல நிலையையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.
தேர்தல் மனநிலையிலேயே புதிய அரசு:
புதிய அரசு பதவியேற்றது முதல் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கொலைகள், பாலியல் வன்முறைகள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் கண் முன்னால் நடந்து வருவதாகக் குற்றம்சாட்டினார். “நாங்கள் (திமுக) ஆட்சியில் இருந்தே வெளியே வந்துவிட்டோம். ஆனால், புதிய அரசோ இன்னும் ஒரு தேர்தல் மனநிலையில் இருந்தே வெளிவராமல், தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. தாங்கள் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் இன்னும் நியாயம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
திராவிட இயக்கத்தின் சாதனை:
நாம் செய்யத் தவறிய விஷயங்களுக்கு யார் மீது பழி போடலாம் என்று தேடுவது மிகவும் சுலபமான வேலை . “நாங்கள் நினைத்திருந்தால் ‘3000 ஆண்டுகளாக எங்களைப் படிக்க விடவில்லை, பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை’ என்று காரணங்களைச் சொல்லிக் கொண்டே இருந்திருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் அந்த விலங்குகளை உடைத்தெறிந்து மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த மாற்றத்தால்தான் தமிழ்நாட்டின் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பழி போடுவதால் மாற்றம் வராது:
தொடர்ந்து பேசிய அவர், “யார் மேல் பழி போடலாம் என்று தேடிக்கொண்டே இருந்தால் எந்த மாற்றமும் வராது. அப்படிப் பழி தேடாமல் பொறுப்பேற்று ஆட்சி செய்த தலைவர்தான் கலைஞர் கருணாநிதி. அவர் காட்டிய வழியில் ஆட்சி செய்த முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின், தற்போது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர் கலைஞரின் கொள்கை வழியிலேயே தமிழ்நாட்டைத் தொடர்ந்து நடத்துவார்” என்றார்.
இதையும் படிக்க : இன்பதுரை வெற்றி செல்லாது, அப்பாவு வெற்றிபெற்றது உறுதி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கல்வி, மொழி, மாநில சுயாட்சி எனத் தமிழ்நாட்டின் அடிப்படைப் பாதையைத் தீர்மானித்தவர் கலைஞர் என்றும், அந்தப் பாதையை விட்டு இந்த புதிய அரசு விலகினால் தமிழ்நாட்டு மக்கள் இவர்களைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் கூறி, “மீண்டும் தமிழ்நாட்டை வென்றெடுப்போம்” எனத் தனது உரையை கனிமொழி நிறைவு செய்தார்.