“மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!”.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!
Senthil Balaji Press Meet on DVAC Raid: லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதோ அல்லது FIR-இலோ பெயர் இல்லாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டதாலேயே முன்ஜாமீன் பெற்றதாகக் கூறினார். மேலும், தன் அறையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை, ஜூலை 29: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, சோதனையின் பின்னணி மற்றும் வழக்கு தொடர்பான பல்வேறு விவரங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?
“என் அறையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை!”
இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தான் தங்கியிருந்த அறைக்குச் சோதனை செய்ய வந்ததாகக் கூறிய செந்தில் பாலாஜி, “அதிகாரிகள் வந்தபோது தாராளமாகச் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அறையைத் திறந்துவிட்டேன். அறை முழுவதையும் சோதனையிட்ட அதிகாரிகள், எந்தவிதமான சந்தேகத்திற்குரிய ஆவணங்களும் கிடைக்கவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிட்டு, என்னிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டு நகலையும் வழங்கிச் சென்றனர்,” என்று தெரிவித்தார்.
முன்ஜாமீன் பெற்றது ஏன்? விளக்கம்:
வழக்கில் பெயர் இல்லாத சூழலில் முன்ஜாமீன் பெற்றது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், சம்மன் அனுப்பப்பட்டதால் நடவடிக்கை: முதன்மைப் புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ எனது பெயர் இல்லாதபோதிலும், விசாரணை என்ற பெயரில் எனது பெயரை இணைத்துச் சம்மன் அனுப்பினர்.
தேடி வந்து சம்மன் அளிக்கப்பட்டதன் அடிப்படையில்தான், சட்டப் பாதுகாப்பிற்காக நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றேன். முன்ஜாமீன் நிபந்தனைப்படி தினசரி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன். இன்று காலை சோதனை நடந்ததால், அது முடிந்தவுடன் தற்காலிகமாகத் தாமதமாகி தற்போது கையெழுத்திடச் செல்வதாகக் குறிப்பிட்டார்.
“அரசியல் பழிவாங்கல்; எதிர்கொள்ளத் தயார்!”
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் சுமத்துவதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை ‘மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை’. கழகத் தலைவர் எங்களை நெஞ்சுரத்தோடு வளர்த்திருக்கிறார். எந்த வழக்காக இருந்தாலும், எத்தனை சோதனைகளாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக நேர்நின்று தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!
புதிய வழக்குப் பதிவு:
ஏற்கனவே டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாகப் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எங்களது மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் கூறினார்.