“முதல்வர் விஜய்க்கு ஒரு நியாயம்; சீமானுக்கு ஒரு நியாயமா?”.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனம்!
Seeman Defamation Case: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் விஜய் குறித்துப் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று நீதிபதி விக்டோரியா கெளரி அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை, ஜூலை 29: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்கள்; ஆனால் சீமான் பற்றி அவதூறு பேசினால் நடவடிக்கை இல்லையா?” என்று விசாரணை அமைப்புகளுக்கு நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க : அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!
எந்தவித ஆதாரமின்றி அவதூறு:
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சினிமா விமர்சகரும் யூடியூபருமான பிஸ்மி மற்றும் ‘தமிழன் கோல்’ யூடியூப் சேனல் ஆகியவை, “திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து சீமான் ரூ.100 கோடி பெற்றார்” என்று எந்தவித ஆதாரமுமின்றி அவதூறு பரப்பி வருகின்றன. மேலும், சீமானின் உருவத்தை ஆபாசமாகவும் தவறாகவும் மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனத் கோரப்பட்டிருந்தது.
“சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்”:
இந்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பின் அலட்சியப் போக்கிற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். “தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இரட்டை நிலைப்பாடு:
“திமுக எம்.எல்.ஏ ஒருவர் முதல்வர் விஜய் குறித்துப் பேசியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்கள். பழனி மட நிலப் பத்திரப்பதிவு தொடர்பாக அமைச்சர் ரமேஷ் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சீமான் விவகாரத்தில் மட்டும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். “இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்றும் நீதிபதி எச்சரித்தார்.
இதையும் படிக்க : மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
சைபர் கிரைம் போலீசாருக்குக் கெடு:
வாதங்களைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவில், இணையதளங்களில் சீமான் குறித்துப் பதிவிடப்பட்டுள்ள மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை (இன்றைய தினமே) உடனடியாக அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.