யூடியூப் வீடியோவைப் பார்த்து சோதனை: தீ விபத்தில் பள்ளி மாணவர் படுகாயம்
YouTube Video Experiment : ஜோலார்பேட்டை அருகே யூடியூப் வீடியோவைப் பார்த்து வீட்டில் சோதனை செய்ய முயன்ற 11 வயது பள்ளி மாணவன், தீ விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர், அக்டோபர் 10: ஜோலார்பேட்டை அருகே யூடியூப் வீடியோவைப் பார்த்து வீட்டில் சோதனை செய்ய முயன்ற 11 வயது பள்ளி மாணவன், தீ விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யூடியூப் வீடியோவைப் பார்த்து சோதனை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது மகன் கவின் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறும் மாணவனான கவினுக்கு, அறிவியல் சோதனைகளைச் செய்து பார்ப்பதில் அதிக ஆர்வம் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் வீடுகளில் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதையும் படிக்க : ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை சந்திக்க திட்டம் – என்ன காரணம்?




இந்த நிலையில் அக்டோபர் 10, 2026 இன்று கவின் படிக்கும் பள்ளியில் பெற்றோர் சந்திப்பு நடைபெறவிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காகக் காலையில் கவின் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்கு வர்ணம் பூசுவதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த தின்னரைப் பயன்படுத்தி, யூடியூபில் பார்த்த ஒரு சோதனையைச் செய்து பார்க்க அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக தின்னர் அவரது ஆடையில் பட்டு, தீப்பற்றியது. சில நொடிகளில் தீ உடல் முழுவதும் பரவியதால், வலி தாங்காமல் கவின் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், மகன் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். படுகாயமடைந்த கவினை, உறவினர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
உடலில் சுமார் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனைக் காப்பாற்றும் முயற்சியில் தந்தை இளையரசுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க : இடைத்தேர்தல் முடிவுகள்.. மு.க.ஸ்டாலின் இப்படியே இருங்க விளங்கிடும்.. மாணிக்கம் தாகூர் அதிரடி அட்டாக்..
படிப்பிலும் அறிவியலிலும் ஆர்வமுள்ள சிறுவனுக்கு நேர்ந்த இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தின்னர், பெட்ரோல், மண்ணெண்ணெய், ஸ்பிரிட் போன்றவை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள். இவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில், பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம். இணையத்தில் காணும் சோதனைகளைப் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகள் வீட்டில் செய்து பார்ப்பது ஆபத்தில் முடியலாம். குழந்தைகள் எந்த வகையான வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.