கிரிப்டோவில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆகிடுவீங்க.. ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்.. விழுப்புரத்தில் இருவர் கைது!
Villupuram Cryptocurrency Fraud : விழுப்புரத்தில் ரூ. 1 கோடி கிரிப்டோ கரன்சி முதலீட்டு மோசடி தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனியார் டிரேடிங் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், தனியார் நிறுவனம் கூறியபடி லாபத் தொகையை அவர்களுக்கு வழங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக முதலீடு செய்த பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் லாபத் தொகை தங்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்ததாக தெரிகிறது.
கிரிப்டோ கரன்சியில் லாப தொகை வழங்கவில்லை
இதனால், சில மாதங்கள் லாபத் தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்காமல் இருந்துள்ளனர். ஆனால், தனியார் நிறுவனம் அளித்த கால கெடுவையும் தாண்டி லாபத் தொகை தங்களுக்கு வந்து சேராத காரணத்தால், மீண்டும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த நிறுவனம் தரப்பில் இருந்து முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் இது தொடர்பாக ஆன்லைன் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: கோழிப்பண்ணையில் அரங்கேறிய பயங்கரம்.. ஓட ஓட விரட்டி ஓவிய ஆசிரியர் படுகொலை.. பெரம்பலூர் அதிர்ச்சி!




6 பிரிவுகளின் கீழ் வழக்கு- மேலாளர் உள்பட இருவர் கைது
அந்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு காவல்துறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், தனியார் டிரேடிங் நிறுவனத்தின் மேலாளர் மாரியப்பன் மற்றும் ஊழியர் மதுபாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தொடர்புடைய இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், 6 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப், 40 வங்கி கணக்கு புத்தகங்கள், 20 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ. 1 கோடி மோசடி தொடர்பாக தீவிர விசாரணை
தொடர்ந்து, இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது. மோசடி செய்யப்பட்ட ரூ. 1 கோடி பணத்தை என்ன செய்தனர் என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த யுவஸ்ரீ என்ற பெண் மற்ற ஊழியர்களின் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: சென்னை மக்களே Ride செல்ல ரெடியா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை நேரம் அறிவிப்பு.. முழு விவரம்!