செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்
MP Kanimozhi On Custodial Death: பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார். பொய்களை மட்டுமே கூறி ஆட்சி நடைபெறும் சூழலில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25, 2026: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். புகாரளிக்க வந்தவரை காவல்துறையினர் தாக்கி சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை எனக் கூறி அரசு நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதக் காவலில் வைத்து சித்திரவதை – உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
பாலகிருஷ்ணன் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டு, காவல்துறையினரின் சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்..
ரூ.3 லட்சம், அரசு வேலை தருவதாகக் காவல்துறை பேரம்?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 25, 2026
இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு.. உதயநிதி பேட்டியில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய கருத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
மேலும், பாலகிருஷ்ணனின் உயிரிழப்பு தொடர்பாக சமரசம் செய்துகொள்ள ரூ.3 லட்சம் பணமும், அரசு வேலையும் வழங்குவதாகக் காவல்துறையினர் கூறியதாக அவரது மனைவி சுதா குற்றம்சாட்டியுள்ளதையும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு தமிழக அரசு என்ன பதிலளிக்கப் போகிறது என்றும், இன்னும் எத்தனை உண்மைகளை அரசு மறைக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்
மேலும், பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார். பொய்களை மட்டுமே கூறி ஆட்சி நடைபெறும் சூழலில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.