இடைத்தேர்தல் முடிவுகள்.. மு.க.ஸ்டாலின் இப்படியே இருங்க விளங்கிடும்.. மாணிக்கம் தாகூர் அதிரடி அட்டாக்..
Congress leader Manickam Tagore : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் இப்படி இருங்க விளங்கி விடும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார் .
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வியில் வெற்றி என்றும், தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றிகள் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். இப்படியே இருங்க தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள் விளங்கி வந்துவிடும். திமுகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததால் திமுகவுக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் 8 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன. இந்த நிலையிலும், மகிழ்ச்சி கொண்டாடிக் கொண்டிருந்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தமிழக மக்கள் எவ்வளவு தண்டனை வழங்கினாலும் அவர்களின் ஆணவம், அகங்காரத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வருத்தமாக உள்ளது. திமுகவை பொருத்தவரை 3- ஆம் இடம் பிடிப்பார்கள் என்று நினைத்தனர். அவர்களை விட அதிமுகவை, எடப்பாடி வேகமாக கீழே இழுத்து சென்று விட்டார்.
திமுகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 8 ஆயிரம் வாக்குகள் குறைவு
தங்களது கட்சிகளை யார் வேகமாக கீழே இழுத்துக் கொண்டு செல்வது என்பதில் தான் எடப்பாடி பழனிசாமிக்கும் உதயநிதிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. மக்களிடம் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக எவ்வளவு தூரமாக செல்கிறது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து பெற்ற வாக்குகளில் 8 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது. அதைப்பற்றி பயப்படாமலும், யோசிக்காமலும் அந்த கட்சியினர் உள்ளனர். கூட்டணி கட்சிகள் தங்களுடன் இல்லை என திமுகவினர் நினைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: கோழிப்பண்ணையில் அரங்கேறிய பயங்கரம்.. ஓட ஓட விரட்டி ஓவிய ஆசிரியர் படுகொலை.. பெரம்பலூர் அதிர்ச்சி!




கூட்டணி கட்சி வாக்குகள் சேர்ந்தது தான் திமுக ஓட்டு
மனிதநேய மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், கொங்கு நாடு கட்சி ஆகியவை ஓட்டுகள் சேர்ந்துதான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. எவ்வளவு கீழே இறங்கினாலும் திமுகவினர் அதனை உணராமல் ஆணவத்தோடு பேசுகின்றனர். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பேசுவது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. ராகுல் காந்தி, விஜய் இடையேயான உறவு சகோதரத்துவ உறவாகும். இந்த உறவு பலமான உறவு. தமிழகத்தையும், இந்தியாவையும் காக்கக்கூடிய உறவாக இருக்கும்.
திமுக மீதான நடவடிக்கைகள் என்ன ஆயிற்று
திமுக மீதான அமலாக்கத்துறை வழக்கு எதுவும் வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் என்னவானது என தெரியவில்லை. திமுக பாஜகவை எதிர்த்தவரை அமலாக்கத்துறை சிபிஐ அனைத்தும் திமுகவுக்கு எதிராக இருந்தது. தற்போது, அனைவரும் அமைதியாக உள்ளனர். பிரதமரும், முதல்வரும் சந்திப்பதில் தவறு இல்லை கொள்கை, அரசியல் நிலை என்ன என்பது தான் முக்கியம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சென்னை மக்களே Ride செல்ல ரெடியா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை நேரம் அறிவிப்பு.. முழு விவரம்!