கோழிப்பண்ணையில் அரங்கேறிய பயங்கரம்.. ஓட ஓட விரட்டி ஓவிய ஆசிரியர் படுகொலை.. பெரம்பலூர் அதிர்ச்சி!
Perambalur Art Teacher Murder : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணி புரிந்து வந்த ஓவிய ஆசிரியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
அரியலூர் மாவட்டம், பெரிய திருகோணம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ( 50 வயது). இவர், கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், அவ்வப்போது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினரான ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு சென்று வருவது வழக்கம் ஆகும். அதன் படி, சம்பவத்தன்று ஓவிய ஆசிரியர் புகழேந்தி கோழிப்பண்ணைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், புகழேந்தி அந்த கோழி பண்ணையில் கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சந்தேகத்தின் பேரில் 3 பேரை தேடும் போலீஸ்
தொடர்ந்து, சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக புகழேந்தியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குன்னம் பகுதியைச் சேர்ந்த சிவ சூரியா ( 30 வயது), மணிகண்டன் ( 35 வயது) மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் கோழி பண்ணையில் புகழேந்தியை துரத்தி சென்றதாக தெரியவந்தது.
மேலும் படிக்க: போலீஸுக்கு தண்ணி காட்டிய போக்சோ கைதி.. 3 ஆயுதப்படை காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
இதன் காரணமாக இந்த கொலை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மேற்கண்ட 3 பேரும் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். அவர்கள் சிக்கும் நிலையில், இந்த கொலை சம்பவத்துக்கான துப்பு துலங்கும் என்று தெரிகிறது. ஒரு வேளை புகழேந்தி கொலை சம்பவத்துக்கு அவர்கள் காரணமாக இருப்பின், கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி ஆய்வு
அத்துடன் கோழி பண்ணையில் உரிமையாளர் ராமகிருஷ்ணா மற்றும் பண்ணையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கோழிப்பண்ணைக்கு செல்லும் பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பகீர்.. ஊதிய பாக்கியால் வெடித்த மோதல்.. பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை.. இருவர் கைது!