கோவையில் கோர சம்பவம்.. சீறிப்பாய்ந்து வந்த லாரி மோதி விபத்து.. நொடியில் பறிபோன மாணவன் உயிர்..!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியா கல்லூரி மாணவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து பாலாஜி (19 வயது). இவர், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருடன் நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த சூர்யா (19 வயது) என்பவரும் உடன் படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக குறிச்சி குளக்கரையில் உள்ள திருவள்ளூர் சிலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் பின்னால் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த லாரி முத்து பாலாஜி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் மாணவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
உடல் நசுங்கி உயிரிழந்த மாணவன்
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு மாணவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மாணவர் முத்து பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொரு மாணவர் சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க: கிரிப்டோவில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆகிடுவீங்க.. ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்.. விழுப்புரத்தில் இருவர் கைது!




போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை
விபத்தில் காயமடைந்த மாணவர் முத்து பாலாஜியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூர் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுனர் தப்பி ஓடினார். அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பரபரப்பான சாலையில் நிகழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
பரபரப்பாக இயங்கி வரும் குறிஞ்சி குளக்கரை சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது. உடனே, போலீசார் போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கடலூரில் பயங்கரம்.. வழக்கறிஞர் நலச்சங்க தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!