கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!
Ramanathapuram Bus Driver Conductor Controversy : ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்தை பயணிகளுடன் சாலையோரம் நிறுத்தி விட்டு திருமண வீட்டில் உணவருந்த சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காரைக்குடி போக்குவரத்து பொது மேலாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்துக்கு அரசு சிறப்பு டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பெண்களுக்கு கட்டணம் இல்லா இந்த இலவச பேருந்தில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை பெரிய பட்டினத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். இந்த பேருந்தின் ஓட்டுனராக அஜித்குமார், நடத்துனராக வேல்முருகன் ஆகியோர் பணியில் இருந்தனர். பேருந்தானது, இராமநாதபுரத்துக்கு வரும் வழியில் தெற்கு புது குடியிருப்பு கிராமத்தில் சாலையோரம் பயணிகளுடன் பேருந்து நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அங்கு நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்றுள்ளனர்.
திருமண விழாவி்க்கு சென்ற பேருந்து ஓட்டுநர்- நடத்துனர்
அங்கு, திருமணத்தில் பங்கேற்று விட்டு, உணவு அருந்திவிட்டு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பேருந்து வெகு நேரமாக சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், இருந்த பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வந்தபோது அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பதிலுக்கு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து பேருந்து புறப்பட்டு சென்றது.
மேலும் படிக்க: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!




வேறு நிறுத்தத்தில் பயணிகள் இறக்கி விட்ட ஓட்டுநர்
இந்த சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்தினர் ஆகியோர் ராமநாதபுரத்தில் முக்கிய பேருந்து நிறுத்தமான டி பிளாக் பகுதியில் பேருந்து நிறுத்தாமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு தள்ளி உள்ள பாரதி நகரில் பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக மேலாளர் தெய்வேந்திரன் கவனத்துக்கு சென்றது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டார்.
ஓட்டுநர்- நடத்துனர் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை
அதன் அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக காரைக்குடி பொது மேலாளர் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விரைவில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க: பெற்ற தாயின் மனம் கல்லான சம்பவம்.. ரூ.1.39 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. தம்பதி உள்பட 3 பேர் கைது!