விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்… தவெக இணை செயலாளர் அதிரடி நீக்கம்!
Cuddalore TVK Joint Secretary Pulavendran: கடலூரில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கட்சியின் மாவட்ட செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக இணை செயலாளராக இருந்து வந்தவர் புலவேந்திரன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளராக இருந்து வந்த புலவேந்திரனை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கடலூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகம் கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளராக செயல்பட்டு வந்த புலவேந்திரன் என்பவர் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து புலவேந்திரன் நீக்கம்
மேலும், தமிழக வெற்றிக் கழக தலைமையக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மேற்கண்ட புலவேந்திரன் நீக்கம் செய்யப்படுகிறார்..எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மாவட்ட சார்பு அணிகள், ஒன்றிய அணிகள், நகர, பேரூர், கிளை வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் யாரும் இவரிடம் கட்சி சார்ந்த எந்தவிதமான தொடர்பும் கண்டிப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி… ஜனநாயகன்பட தயாரிப்பாளர் நியமனம்!




விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் லட்சம் கேட்ட தவெக இணை செயலர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அங்கு, விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வரும் நிலையில், ஆளும் கட்சியின் பிரமுகர் என கூறிக்கொண்டு கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அப்போது, காரில் வந்திருந்த அவரிடம் விவசாயிகள் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமூகவலைதளங்களில் வைரலான வாக்குவாத வீடியோ
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கடலூர் தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரனை நீக்கி கட்சி மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுகவில் 3 பேருக்கு மாநில பதவி… எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு.. யார் அவர்கள்..!