தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி… ஜனநாயகன்பட தயாரிப்பாளர் நியமனம்!
Delhi Special Representative : தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளரான வெங்கட் நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ளார். இது குறித்து விரிவான தகவலை இந்தப் பதவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றி கழகம் அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அரசாணையை தலைமை செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ளார். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படக்கூடிய முக்கிய பதவியாக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி பார்க்கப்படுகிறது. டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது அமைச்சர் பதவிக்கு நிகரானதாகும். இந்த பதவியில் இருக்கக்கூடிய நபருக்கு டெல்லியில் பங்களா, அமைச்சருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் வழங்கப்படும்.
ஆளுநர் – முதல்வர் சந்திப்பின் போது
இந்த பதவிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், இதற்கான உத்தரவு தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அவர் இணைந்த பின்னர் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட் நாராயணன் நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர், தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க சென்ற போது, உடன் சென்றிருந்தார்.
மேலும் படிக்க: தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!




டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஒராண்டு பணி
இவர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த பதவியில் இருப்பார். இவரது செயல்பாட்டை பொறுத்து பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி தேவையான நிதியை பெறுவது, ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை டெல்லியில் இருந்து பார்வையிடுவது, தமிழக அரசின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறுவது இந்தப் பதவியின் முக்கிய பணிகள் ஆகும்.
கர்நாடக மாநில முதல்வருக்கு நெருக்கமானவர்
இவர், கர்நாடக மாநிலத்தின் முதல்வர் டி. கே. சிவகுமாருக்கு நெருங்கிய நபர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே காவிரி நீர், மேகதாது அணை தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக டி.கே. சிவக்குமாருக்கு வேண்டிய ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: தமிழக இடைத்தேர்தல்: அதிமுக- திமுக பொது வேட்பாளராக சீமான்?