பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!
Minister Vijayalakshmi Inspected: நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட சாயப்பட்டறை ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆலைகள் சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வந்த நிலையில், நள்ளிரவில் அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் விதிகளை மீறி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் சாய பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு சாயப்பட்டறைகள் மீது குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாய தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் ஒன்றாக இணைந்து அமைச்சர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கவும், தங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்குமாறும் கேட்டிருந்தனர். அதன்படி, அமைச்சரும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி இருந்தார்.
நள்ளிரவு ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் விஜயலட்சுமி
இந்த நிலையில், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் சீல் வைக்கப்பட்டிருந்த சாயப்பட்டறைகளின் சீலை அதன் உரிமையாளர்கள் உடைத்து இரவு நேரங்களில் சாயப்பட்டறைகளை செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் அமைச்சர் விஜயலட்சுமியின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை ஆலைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!




சீல் உடைக்கப்பட்ட இயங்கி வந்த சாய ஆலைகள்
அப்போது, ஓட்டமெத்தை, ஆவத்திபாளையம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் மேற்கொண்ட ஆய்வில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டிருந்த 2 சாயப்பட்டறை ஆலைகளின் சீல் உடைக்கப்பட்டு செயல்பட்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த சாயப்பட்டறை ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் விஜயலட்சுமி கூறுகையில்,
சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறை ஆலைகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோல, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 4 குழுக்களாக பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் விதிகளை மீறி செயல்பட்டதாக 20 சாயப்பட்டறை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. இங்கேயும் சோதனை பண்ணுங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றிய அண்ணாமலை!