பணியில் பொறுப்பு வேண்டாமா? பொய் புகாரை விசாரிக்காததால் வந்த வினை.. பெண் இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு!
Cuddalore Inspector Dismissed : கடலூர் மாவட்டத்தில் போலியான புகாரை முறையாக விசாரிக்காமல் சிஎஸ்ஆர் பதிவு செய்து அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓரத்தூர் பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமியை விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது சொத்து ஆவணம் காணாமல் போனதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறும் கடந்த 2024- ஆம் ஆண்டு ஆன்லைன் மூலமாக புவனகிரி காவல் நிலையத்துக்கு புகார் பதிவு செய்திருந்தார். அந்த புகாரை பெற்ற அப்போதைய புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த லட்சுமி முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட புகார் தாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு புகாரை முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் இன்ஸ்பெக்டர் லட்சுமி மீது புகார் ஆக எழுந்தது. இந்த விவகாரம் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையின் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது.
பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி பணி நீக்கம்
இதில், புவனகிரி காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த லட்சுமி (தற்போது சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்) மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசுவிடம் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமியை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி… ஜனநாயகன்பட தயாரிப்பாளர் நியமனம்!




புகாரை விசாரிக்காமல் சிஎஸ்ஆர் பதிவு
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி தொலைந்து போன நில ஆவணங்களுக்கு முறைகேடாக சிஎஸ்ஆர் பதிவு செய்து தடையில்லா சான்று பலருக்கு வழங்கி வருவதாக புகார் ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போதைய எஸ்பி ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொலைந்து போன பத்திரங்கள் மற்றும் நில ஆவணங்கள் புவனகிரியில் காணாமல் போனதாக முறைகேடாக ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட புகார் மீது பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி சி எஸ் ஆர் பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்
இதன் காரணமாக பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி கடலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் சரக டிஐஜி அருள் அரசுக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமியை பணி நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழக இடைத்தேர்தல்: அதிமுக- திமுக பொது வேட்பாளர் சீமான்? அரண்டுபோன அரசியல் களம்!