பெற்ற தாயின் மனம் கல்லான சம்பவம்.. ரூ.1.39 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. தம்பதி உள்பட 3 பேர் கைது!
Salem Baby Girl Selling: சேலத்தில் தம்பதிக்கு 4- ஆவதாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1.39 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், குழந்தையை பெற்ற தம்பதி உள்பட 3 பேரை கொண்டாலம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், அரியானூர் அருகே உள்ள சந்தன காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நெசவு தொழிலில் போதிய அளவு வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பத்தை நடத்துவதற்கு சீனிவாசன் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனிவாசனின் மனைவி கவிதா 4- ஆவது முறையாக கர்ப்பம் அடைந்தார். இதன் காரணமாக கடந்த ஜூன் 19- ஆம் தேதி அரியானூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே, இரு பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், 4- ஆவது பெண் குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்க்க முடியும் என்று யோசிக்க தொடங்கினர். இதனால், தனது குழந்தையை வேறு நபருக்கு விற்று விடலாம் என திட்டமிட்டுள்ளனர்.
ரூ.1.39 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை
அதன்படி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கவிதா தனது கணவர் சீனிவாசன் உடன் சேர்ந்து ராமநாதபுரத்தில் சேர்ந்த இந்திரகுமார், முத்துலட்சுமி தம்பதிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம், பெரிய புதூரில் மளிகை கடை நடத்தி வரும் சீனிவாசனின் உறவினரான ராமமூர்த்தி செய்துள்ளார். அதன்படி, குழந்தை பிறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பேசப்பட்டு குழந்தையை விற்று உள்ளனர்.
மேலும் படிக்க: பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!




போலீசாரின் காதுகளுக்கு எட்டிய விவகாரம்
இந்த விவகாரம் வெளியில் கசிய ஆரம்பித்த நிலையில், இது தொடர்பாக போலீசார் சீனிவாசன் மற்றும் கவிதா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக 4- ஆவது பிறந்த பெண் பச்சிளம் குழந்தையை ரூ.1.39 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, குழந்தையை வாங்கிய இந்திரகுமார், முத்துலட்சுமி தம்பதியை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால், பயந்து போன அந்த தம்பதி குழந்தையை மீண்டும் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.
தம்பதி உள்பட 3 பேர் கைது
அதன் பேரில், கொண்டாலம்பட்டி போலீசார் ராமநாதபுரத்தில் இருந்து குழந்தையை மீட்டு சேலத்துக்கு கொண்டு வந்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திரகுமார், முத்துலட்சுமி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த ராமமூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!