மதிமுக பொதுக்குழு கூட்டம்.. டிமிக்கி கொடுத்த இரு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் வைகோ-துரை வைகோ!
MDMK General Council meeting: சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூட்டத்தை அந்த கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏக்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக 4 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில், சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்படி, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏவாக ராஜேந்திரனும், சீர்காழி தொகுதி எம்எல்ஏவாக செந்தில் செல்வனும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணிக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், மதிமுகவின் இரு எம்எல்ஏக்களும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளதால் நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் ராஜேந்திரன் எம்எல்ஏ பங்கேற்ற நிலையில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் இன்று சனிக்கிழமை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த இரு எம்எல்ஏக்கள்
இந்த கூட்டத்தில், ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் செந்தில் செல்வன் எம்எல்ஏ ஆகிய இருவரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இது கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில், வைகோ திமுக கூட்டணியில் இருந்து தவெக கூட்டணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதால் இரு எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனை விரும்பாத எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுகவில் 3 பேருக்கு மாநில பதவி… எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு.. யார் அவர்கள்..!




இடைத்தேர்தலில் துரை வைகோ போட்டியிடுகிறாரா
அத்துடன் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இணைந்தாலும் இடைத்தேர்தலில் மீண்டும் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாக தெரிகிறது. அத்துடன் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான துரை வைகோ இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் தவெக அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், தங்களது எம்எல்ஏ பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக இது எம்எல்ஏக்களும் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிகிறது.
திமுக இணைந்து பதவியை காப்பாற்ற திட்டமா
அத்துடன் இரு எம்எல்ஏக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புரம் இருந்தாலும், மதிமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பொதுக்குழு கூட்டம் முடிந்தவுடன் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!