வருகிற செப்.30 தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் – காரணம் என்ன?
Private Bus Strike : தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 30, 2026 அன்று வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மதுரை, செப்டம்பர் 28 : தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 30, 2026 அன்று வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
வருகிற செப்.30 தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் தனியார் பேருந்துகளை இணைத்து, அதற்கான மானியத்தை அரசே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 30, 2026 அன்று வேலை நிறுத்தத்தை தமிழ்நாடு தனியார் பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 3க்கும் மேற்பட்டோர் மயக்கம்? வெளியான பரபரப்பு தகவல்




தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் திட்டம் வரும் அக்டோபர் 2, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. தினமும் பேருந்து பயணிக்கும் பெண்களுக்கு இது பெரிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண் பயணிகள் பெருமளவில் அரசு பேருந்துகளுக்கு மாறினால், தனியார் பேருந்துகளின் டிக்கெட் வருவாய் கணிசமாகக் குறையும் என்பதால் அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பேருந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடைசியாக 2018 ஆம் ஆண்டுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.63க்கு விற்கப்பட்டது. இன்று அது ரூ.100 எட்டியுள்ளது. டீசல் மட்டுமின்றி, உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புச் செலவுகளும் பல மடங்கு உயர்ந்துவிட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஏற்கெனவே செலவுச் சுமையில் தவிக்கும் நிலையில், பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் அனைத்துத் தனியார் பேருந்து உரிமையாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. எனவே, தனியார் பஸ்களிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதித்து, அதற்கு ஈடான தொகையை மானியமாக அரசு வழங்க வேண்டும் என்றும், தனியார் பஸ் தொழில் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் சோகம்.. நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்.. ஒருவர் பலி, மற்றொருவர் நிலை என்ன?
இதற்கிடையே தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் வருகிற அக்டோபர் 2, 2026 முதல் வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்படுகிறது. 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் 69 சதவகித பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இதில் தற்போது நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கின்றனர். புதிய திட்டத்தில் மாநகர, நகர்ப்புற எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர் பேருந்து மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பாதைகளில் பயணிக்கும் பேருந்துகளும் சேர்க்கப்படுகின்றன.