வீக்எண்ட் ஊருக்கு போகும் பிளான் இருக்கா? 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.. முழு விவரம்..
Special Buses Ahead Of Weekend: வெள்ளிக்கிழமை 7,812 பேரும், சனிக்கிழமை 4,001 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8,946 பேரும் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 18, 2026: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப மொத்தம் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு:
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை, 19ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கும் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி 760 பேருந்துகளும், 19ஆம் தேதி 520 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: “திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என கூறியவர் துரை வைகோ!”.. கே.என்.நேரு அதிரடி விமர்சனம்!
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மொத்தம் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்:
மேலும், மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தினமும் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை 7,812 பேரும், சனிக்கிழமை 4,001 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8,946 பேரும் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!
பயணிகளின் வசதிக்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.