AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ph.D. மாணவரின் கல்வி உதவித்தொகை விவகாரம்.. உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லும் மாணவர்? சமூகநீதி துறை விளக்கம்

ரூ.19.50 லட்சம் ஆராய்ச்சி செலவினம் தேவைப்படுவதாக மாணவரின் கோரிக்கையைப் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பரிந்துரைத்து அனுப்புமாறு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன், அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்னஞ்சல் கிடைத்த பின்னர் மாணவர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகைக்காகக் காத்திருப்பதாகவும், இதுவரை தொகை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Ph.D. மாணவரின் கல்வி உதவித்தொகை விவகாரம்.. உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லும் மாணவர்?  சமூகநீதி துறை விளக்கம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Sep 2026 08:08 AM IST

செப்டம்பர் 18, 2026: Ph.D. மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைகள் மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகை குறித்து சமூகநீதி துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சமூகநீதி துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், 2025-2026ஆம் கல்வியாண்டில் மாணவர் பாரதிதாசனின் Ph.D. படிப்புக்காக மொத்தம் ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் கல்வி உதவித்தொகை – சமூகநீதி துறை விளக்கம்:

இதில் ரூ.5,01,638 பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிற்கும், மீதமுள்ள ரூ.30,98,362 மாணவரின் வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  விசா மற்றும் விமானக் கட்டணங்களைத் தவிர்த்து, ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காக மாணவர் பெற்ற ரூ.27,40,140-க்கு செலவுப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர் உரிய ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்காமல் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகையை முழுமையாக வழங்கக் கோரி வந்ததாக துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. “இது ஆன்மீக விழாவா.. அமைச்சர்களின் குடும்ப விழாவா?”.. தவெக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்!!

மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டாம் ஆண்டுக்கான முழு கல்விக் கட்டணமான ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகக் கணக்கிற்கும், வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரின் வங்கிக் கணக்கிற்கும் என மொத்தம் ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவரிடம் கேட்கப்பட்ட விளக்கம்:

மேலும், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் வழங்குமாறு மாணவர் சமர்ப்பித்த உத்தேச செலவினப் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பதிவாளர் பரிந்துரைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்காக மாணவர் சமர்ப்பித்த ஆவணங்களில் ரூ.8,17,962 மதிப்பிலான செலவுப்பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இதுவரை சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் சமூகநீதி துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?

ரூ.19.50 லட்சம் ஆராய்ச்சி செலவினம் தேவைப்படுவதாக மாணவரின் கோரிக்கையைப் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பரிந்துரைத்து அனுப்புமாறு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன், அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் வெளியிட்ட வீடியோ:

இந்நிலையில், மின்னஞ்சல் கிடைத்த பின்னர் மாணவர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகைக்காகக் காத்திருப்பதாகவும், இதுவரை தொகை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னை வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாகவும், ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பப்படுவதாகவும், “என்னைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?” எனக் கண்ணீருடன் பேசியிருந்தார். மாணவரின் இந்தக் கருத்துகள் உண்மைக்கு மாறானவை என சமூகநீதி துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

Follow Us