மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. “இது ஆன்மீக விழாவா.. அமைச்சர்களின் குடும்ப விழாவா?”.. தவெக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்!!
Madurai Meenakshi Amman Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சாமானிய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசு மீது காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமைச்சர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறி அவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, செப்.18: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் மதுரையில் திரண்டனர். இந்நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில் சாமானிய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஆளும் தவெக அரசின் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க : டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் – அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு
சாமானிய மக்களுக்கு அனுமதி மறுப்பு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆன்மீக பெருவிழாவைக் கண்டுகளிக்க சாமானிய பக்தர்கள் அனுமதிக்கப்படாதது தவெக அரசின் ஆணவப் போக்கைக் காட்டுகிறது என்று சாடியுள்ளார். “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு யாருக்கானது? வெறும் பணக்காரர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் மட்டும்தானா?” என்று முதலமைச்சர் விஜய்க்கு அவர் நேரிடையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்களின் குடும்ப விழாவாக மாற்றப்பட்டதா?
மேலும் தனது அறிக்கையில், கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். “நடைபெற்றது ஆன்மீகக் குடமுழுக்கா அல்லது அமைச்சர்களின் குடும்ப விழாவா?” என்று காரசாரமாகக் கேள்வியெழுப்பியுள்ள அவர், கோயிலின் அருகே கூட வரவிடாமல் பக்தர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் என்ன பயங்கரவாதிகளா என்றும் அரசிடம் வினவியுள்ளார்.
இதையும் படிக்க : தோனிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் – ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் திருப்பம்
“நவீன தீண்டாமை” – பாஜக கடும் தாக்கு:
குடமுழுக்கு விழாவின் போது பாட்டில் தண்ணீரை வாலியில் ஊற்றித் தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் செயல் என்றும், இத்தகைய ஏமாற்று வேலைகள் மிகப்பெரிய பாவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 17 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற ஒரு புனிதமான ஆன்மீக நிகழ்வில் சாமானிய பக்தர்களைப் புறக்கணித்து தவெக அரசு “நவீன தீண்டாமையை”க் கடைப்பிடித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவரது இந்த அறிக்கை, தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.