AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என கூறியவர் துரை வைகோ!”.. கே.என்.நேரு அதிரடி விமர்சனம்!

KN Nehru's Sharp Counter to MDMK Leader: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் விமர்சனங்களுக்கு திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். "என்னால் கட்சி நடத்த முடியாது, திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என்று கூறியவர்தான் துரை வைகோ" எனக் கூறிய கே.என்.நேருவின் இந்த விமர்சனம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என கூறியவர் துரை வைகோ!”.. கே.என்.நேரு அதிரடி விமர்சனம்!
துரை வைகோ, கே.என்.நேரு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Sep 2026 08:09 AM IST

செப்டம்பர், 18: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து கூட்டணிக் கணக்குகளும் சித்தாந்த மறுசீரமைப்புகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, திமுக அணியில் இருந்து விலகி தவெக கூட்டணிக்கு மதிமுக ஆதரவு அளித்து வரும் நிலையில், திமுக மற்றும் மதிமுக தலைவர்களிடையே நிலவி வந்த பழைய கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, திமுக தலைமையின் கடந்த கால அணுகுமுறை குறித்தும் மதிமுகவின் வளர்ச்சி முடக்கப்பட்டதாகவும் தெரிவித்த விமர்சனங்கள் விவாதப் பொருளாகின. இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, துரை வைகோவின் பேச்சுகளுக்கு மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?

திமுகவில் சேர விரும்பியவர் துரை வைகோ:

துரை வைகோவின் தொடர் விமர்சனங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு, “துரை வைகோ மிகவும் சின்னப் பிள்ளை, அவர் மிகவும் அதிகமாகப் பேசி வருகிறார்” என்று சாடினார். மேலும், முன்னதாக மதிமுக திமுக கூட்டணியில் இருந்த காலத்து நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “எங்கள் அப்பா மிகவும் கோபக்காரர்; என்னால் எல்லாம் தனியாகக் கட்சி நடத்த முடியாது, நான் உங்கள் திமுகவிலேயே வந்து சேர்ந்து விடுகிறேன் என்று துரை வைகோ எங்களிடம் நேரில் கூறியவர். ஆனால் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அதையெல்லாம் வேண்டாம் என்று கூறி வழிநடத்தினார்” என்ற அதிர்ச்சி தகவலையும் கே.என்.நேரு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்குக் கண்டனம்:

மதிமுக திமுக கூட்டணியில் இருந்தபோது அதன் வளர்ச்சி நின்றுபோய்விட்டதாக துரை வைகோ கூறுவது நியாயமற்றது என்று குறிப்பிட்ட கே.என்.நேரு, “திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளரான அவர், இப்படிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் திருப்பிப் பேசத் தொடங்கினால் அது சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சனையாகிவிடும்” என்று எச்சரித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் (தளபதி) பிறப்பதற்கு முன்பிருந்தே திமுகவின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்தவர்கள் உள்ள நிலையில், அனுபவக் குறைவான துரை வைகோ அவரைப் பற்றி விமர்சித்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவர் எப்போது என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை என்றும் கே.என்.நேரு தனது பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதையும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. “இது ஆன்மீக விழாவா.. அமைச்சர்களின் குடும்ப விழாவா?”.. தவெக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்!!

முன்னாள் கூட்டணித் தலைவர்களிடையே முற்றும் உரசல்:

கே.என்.நேருவின் இந்த பகிரங்கக் குற்றச்சாட்டு, திமுக மற்றும் தவெக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் மதிமுக இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. வைகோவின் அரசியல் தலைமையை முன்னிறுத்தி மதிமுகவை வலுப்படுத்த துரை வைகோ முயன்று வரும் சூழலில், அவரை “கட்சி நடத்த முடியாதவர்” என்றும் “திமுகவில் இணைய முயன்றவர்” என்றும் திமுகவின் மூத்த தலைவர் நேரடியாகச் சாடியிருப்பது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தல் வியூகங்களில் இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த அரசியல் காரசார விவாதம் மேலும் வலுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us