என்னை காவு கொடுக்க திட்டம்.. வாழ ஆசை படுகிறேன்.. தேனி சிறையில் இருந்து தப்பியது குறித்து கைதி பகீர் வீடியோ!
Theni Prisoner Escape : தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடியது ஏன் என்பது குறித்து கைதாவதற்கு முன் கைதி ஒருவர் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேனி மாவட்ட கிளை சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 17 கைதிகள் தப்பி சென்றனர். இவர்களை 17 தனிப்படைகள் அமைத்து போலீசார் அதிரடியாக பிடித்து மீண்டும் சிறைகளில் அடைத்தனர். இந்த நிலையில், தப்பி சென்ற கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம் என்பவர் கைதாவதற்கு முன்பு சிறையில் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த கைதி என்ன பேசியுள்ளார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நீதிபதிக்கு, முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்று வைக்கிறேன். நாங்கள் சிறையில் இருந்து தப்பித்தது எந்த பிரச்சனை செய்வதற்கும் அல்ல. சிறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்து சரணடையலாம் என்பதற்காகவே நாங்கள் தப்பித்தோம்.
சிறையில் மிகவும் சித்ரவதை செய்கின்றனர்
சிறையில் இருப்பதற்கு எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனை சிறை கைதிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எந்த நீதிபதி என் உயிரை காப்பாற்றுகிறாரோ அவரிடம் சரணடைந்து விடுகிறேன். சிறையில் எங்களை மிகவும் சித்திரவதை செய்தனர். இதனை, சிறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தோம். யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவத்தன்று இரவு சிறை அதிகாரி எங்களை திட்டி விட்டு சென்று விட்டார். சிறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததால் சிறை அதிகாரிகள் அனைவரும் எங்களை கடுமையாக திட்டினர்.




மேலும் படிக்க: கைது செய்த கையோடு தப்பியோடிய கைதி.. சம்பவ இடத்தில் என்ன நடந்தது? கோவை போலீசாரின் அதிரடி விளக்கம்!
தேனி மாவட்ட சிறையில் முறையான உணவு வழங்குவதில்லை
தேனி மாவட்ட சிறையில் உணவு சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இந்த உணவு தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததற்கும் எங்களை கொடுமையாக சித்திரவதை செய்தனர். அத்துடன் எங்களை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால், சிறைக்குள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சிறைக்குள் இருந்தால் எங்களை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் நாங்கள் அனைவரும் சிறையில் இருந்து தப்பித்தோம். இந்த விவகாரங்கள் அனைத்தையும் நீதிபதியிடம் தெரிவித்து சரணடையவே திட்டமிட்டோம். அதற்குள் வேறு என்னவோ நடந்து விட்டது.
🚨 தேனி சிறையில் கைதிகளுக்கு என்ன நடந்தது? தப்பியோடிய கைதியின் பரபரப்பு வாக்குமூலம்!
சிறையில் தாங்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாகவும், அதனால்தான் சிறையிலிருந்து தப்பியோடியதாகவும் கைதி ஒருவர் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறைக்குள் உண்மையில் என்ன நடந்தது? கைதி கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுமா?
கைதியின் வாக்குமூலம் உண்மையா? விசாரணை அவசியம்!
#Theni #TamilNadu
— Selvam ❤️💛❤️ (@SelvamElakkiya1) November 1, 2026
என்னை காவு கொடுக்க திட்டம்- வாழ ஆசைப்படுகிறேன்
மற்றபடி போலீஸ்சாருக்கோ, பொது மக்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் இடையூராக இருக்க மாட்டோம். போலீசார் எங்களை சுட்டு பிடிப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது தான் எனக்கு திருமணம் நடைபெற்று எனது மனைவி கர்ப்பமாக உள்ளார். நான் செய்த தவறால் எனது மனைவி மற்றும் பிறக்க போகும் குழந்தையின் வாழ்க்கை கெட்டுவிடும். சிறையில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகளை பார்த்துக் கொள்ளலாம். எனது உயிரை காவு கொடுக்க நினைக்கிறார்கள். நான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: “எனக்கு ஒரு முத்தம் தாயேன்” திருப்பூரில் ரவுடி மனைவியிடம் அடம்பிடித்த போலீஸ்.. Missing புகாரால் வெளிவந்த ஏட்டுவின் சேட்டை!