நெருங்கும் தீபாவளி.. சென்னை டி.நகருக்கு ஷாப்பிங் செய்ய போலாமா.. கள நிலவரம் எப்படி உள்ளது!
Diwali Shopping T,Nagar Crowd : தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை டி. நகர் ரங்கநாதன் தெருவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பொது மக்கள் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக தெரிகிறது. போலீசாரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு 6 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் பண்டிகை கால ஷாப்பிங்கிற்கு பெயர் போன டி. நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகளவு குவிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரங்கநாதன் தெருவில் அதிகளவிலான பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் தலைகளாகவே தெரிந்து வருகிறது. பொதுவாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டி. நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
ரங்கநாதன் தெருவில் குவிந்துள்ள பொது மக்கள்
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் டி. நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்து ஆர்வமும் பொருள்களை வாங்கி வருகின்றனர். சென்னையில் வணிகப் பகுதிகளில் ஒன்றாக தியாகராய நகர் விளங்கி வருவதால், இந்த தெருவில் உள்ள ஜவுளிக்கடை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் விதவிதமான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவை குவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு புது வரவாக தயாராகும் நெல்லை ஷ்பெஷல்.. அறுசுவையுடன் ABC அல்வா.. குவியும் ஆர்டர்கள்!




வழக்கத்தை விட அதிக அளவிலான கூட்டம்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரங்கநாதன் தெருவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. அவ்வாறு கூடியுள்ள பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதில், சுமார் 150 போலீசார் பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட கும்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் டிரோன் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் டிரோன் கேமரா, சிசிடிவி கேமரா, 150 போலீசார்
ரங்கநாதன் தெருவில் மட்டும் இன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 9 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!