கடைசி டி20 போட்டியில் இந்தியா தோல்வி: 3 – 2 எனத் தொடரைக் கைப்பற்றியது ஷ்ரேயஸ் படை
Ind vs NZ : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3–2 எனக் கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும், ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3–2 எனக் கைப்பற்றியது. குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய நியூசிலாந்துக்கு எதிராக, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 61 ரன்களும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்தனர். நமன் தீர் 33 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில், ஆடம் மில்னே 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிக்க : IPL 2027: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ்..? ஹர்திக் எதிர்காலம் என்ன..?




தொடக்கத்தில் இந்தியாவுக்கு நம்பிக்கை
192 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூசிலாந்துக்கு, இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் ஃபின் ஆலனை, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களில் வெளியேற்றினார். ஆனால், மறுமுனையில் நின்ற தொடக்க வீரர் டிம் சீஃபர்ட், இந்தியப் பந்துவீச்சை 4 புறமும் சிதறடித்தார். டேரில் மிட்செலுடன் இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். மிட்செலை வருண் சக்கரவர்த்தி வெளியேற்றிய பிறகு, கிளென் பிலிப்ஸுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
சதத்தை நெருங்கிய சீஃபர்ட், 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்திருந்தபோது, 16வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அதிரடி காட்டிய பிலிப்ஸ்
அதன்பின், கிளென் பிலிப்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்துக் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து, 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்து, இன்னும் 12 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டியது. அந்த அணி ஓவருக்குச் சராசரியாக 10.83 ரன்கள் வீதம் விளாசியது.
இந்தியப் பந்துவீச்சு ஏமாற்றம்
இந்திய பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை எட்டியிருந்தாலும், பந்துவீச்சாளர்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த இன்னிங்ஸில் 19 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் விளாசினர்.
இதையும் படிக்க : WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி.. முதலிடத்தை இழந்து 3வது இடத்திற்கு சரிந்த ஆஸ்திரேலியா!
இதன் மூலம் இந்திய அணி 3 -2 தொடரை வென்றாலும் கடைசி 2 போட்டிகளில் மோசமான பந்து வீச்சு காரணமாக தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கிடையில் நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் இந்திய அணி எதிர்கொள்கிறது. முதல் போட்டி வருகிற நவம்பர் 4, 2026 அன்று தொடங்குகிறது.