ஈரோட்டில் TNPSC குரூப் 2 தேர்வு எழுத சென்ற வனகாப்பாளர்.. மினிவேன் மோதியதில் விபத்து.. கனவோடு சென்றவர் உயிர் கண நேரத்தில் பிரிந்தது!
Erode Forest Guard Died : ஈரோடு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத சென்ற வனக்காப்பாளர் வேன் மோதிய தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் அருகே உள்ள வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டுப்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நவீன் ( 27 வயது). இவர், தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வந்த நவீன் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற அந்த தேர்வில் பங்கேற்பதற்காக பர்கூரில் இருந்து அந்தியூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தாமரைக்கரை- அந்தியூர் சாலையில் உள்ள நெய்க்கரை வளைவு அருகே நவீன் சென்றபோது, அந்த வழியாக அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி வந்த பிக்கப் வேன் எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
வேன் மோதியதில் பலத்த காயமடைந்த வனகாப்பாளர்
இதில், வனக்காப்பாளர் நவீன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரது நெஞ்சு பகுதியில் பிக்கப் வேன் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் நவீன் உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி.. சென்னை டி.நகருக்கு ஷாப்பிங் செய்ய போலாமா.. கள நிலவரம் எப்படி உள்ளது!




ஆம்புலன்ஸில் சென்ற போதே பிரிந்த உயிர்
தொடர்ந்து, அவசர ஆம்புலன்ஸ் மூலமாக நவீன் கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் வாகனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், இரு வாகனமும் வேகமாக வந்த நிலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
பர்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
தொடர்ந்து, இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நவீன் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வேன் ஓட்டுநர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக பைக்கில் சென்ற வனக்காப்பாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நாகையில் பேரதிர்ச்சி.. 4 ஆண்டு உழைப்பை நாசமாக்கிய கரையான்.. சேமித்து வைத்த ரூ.4.88 லட்சம் தூள் தூளானது!